தலைமைக்கு எதிராக கருத்து சொல்லும் கட்சியின் உயர்மட்ட நிர்வாகி..!

“நிதிஷ்குமாரை, பிரதமர் நரேந்திரமோடிக்கு போட்டியாளராக நினைத்தவர்கள், தங்களின் முடிவு தவறு என்று உணரலாம். அதேசமயம், நரேந்திர மோடியை தோற்கடிக்கும் பொருட்டே, நிதிஷ்குமார் தனது ஆட்சிமுறையில் சமரசம் செய்துகொண்டிருந்தார் என்று நினைத்தவர்கள், தங்களின் எண்ணம் சரியானது என்பதைக் கண்டுகொள்ளலாம்.

இது, அவரவர் எந்தப் பக்கமாக நின்று பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது” என்று கருத்து தெரிவித்துள்ளவர், வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைத்துவிட வேண்டாம். சாட்சாத், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதாளக் கட்சியின் துணைத் தலைவர் பிரஷாந்த் கிஷோர்தான்.

அவர் மேலும் கூறியதாவது, “நிதிஷ்குமார், பாரதீய ஜனதாவின் பக்கம் சென்றபோது, அவர் புதிதாக தேர்தலை சந்தித்திருக்க வேண்டுமென்பது எனது எண்ணம்” என்றார்.

அவரின் இந்தக் கருத்து கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரஷாந்த் கிஷோர், தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து, அரசியல்வாதியாக மாறியவர்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், இக்கருத்து தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார். “மக்கள் எங்களுக்கு வாக்களித்த காரணங்களுள் முக்கியமானது, ‘ஊழல் ஒழிப்பு’ என்பதே. எனவே, அவர் எப்படி இப்படியான கேள்விகளை எழுப்பலாம்?” என்றுள்ளார்.

“கட்சிதான், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குகிறது. ஆனால், அவரால் அப்படி உருவாக்க முடியும் என்பதாக கூறிக்கொள்கிறார். அவர் இந்தக் கட்சியின் துணைத் தலைவர் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், “நாங்கள் இதுவரை என்ன சொல்லிக்கொண்டிருந்தோமோ, அதுதான் இப்போது வெளியில் வந்திருக்கிறது” என்றுள்ளது.

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி