போபால்,

பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வகை செய்யும் மசோதா நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது இன்னும் நிறைவேறாமல் உள்ளது. இந்நிலையில், 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று என்று வெங்கையா நாயுடு யோசனை தெரிவித்துள்ளார்.

 

மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் மாநில அளவிலான மகளிர் சுய உதவிக்குழு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவத,

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது.

அதை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும்.  இதில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது. தனிப்பட்ட முறையில், இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தாலும், அந்த பெண்களின் கணவன்மார்கள்தான் உண்மையிலேயே அதிகாரம் செலுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது நிலைமை மாறி வருகிறது. பெண்கள் தங்கள் உரிமைக்காக போராட கற்றுக்கொள்வார்கள். இதற்கு சட்டத்தில் மட்டுமின்றி, மனப்போக்கிலும் மாறுதல் தேவை.

பிள்ளைகளில் மகன் என்றும், மகள் என்றும் பாரபட்சம் காட்டக்கூடாது. குடும்ப சொத்துகளை இருவருக் கும் சமமாக பிரித்து தர வேண்டும்.

நமது நாடு ‘பாரத் மாதா’ என்றுதான் அழைக்கப்படுகிறது. நமது பழங்கால இலக்கியங்களில் சரஸ்வதியை ‘கல்வி மந்திரி’ என்றும், துர்க்கையை ‘பாதுகாப்பு மந்திரி’ என்றும், லட்சுமியை ‘நிதி மந்திரி’ என்றும் குறிப்பிடுகிறோம். பெண்களுக்கு வாய்ப்பு அளித்தால், அவர்கள் திறம்பட செயல்படுவார்கள். பாதுகாப்பு மந்திரி, நிதி மந்திரி, பாராளுமன்ற சபாநாயகர் போன்ற பதவிகளை பெண்கள் வகித்துள்ளனர்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.