உலக இந்து மாநாட்டில் வெங்கைய நாயுடு பங்கேற்றதில் சர்ச்சை…நெட்டிசன்கள் கேள்வி?

டில்லி:
உலக இந்து மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சிகாகோ நகரில் உலக இந்து மாநாடு நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் மற்றும் விஹெச்பி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வெங்கைய நாயுடு பங்கேற்று தற்போது சர்ச்சையாகியுள்ளது. மதசார்பற்ற இந்தியாவின் உயர் அரசியலமைப்பு பதவி வகிக்கும் வெங்கயை நாயுடு, அரசு செலுத்தும் தொகை மூலம் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் எப்படி ஆர்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி தலைவர்கள் அமர்ந்திருந்த மேடையை பகிர்ந்து கொண்டார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கேள்வி கணைகள் குவிந்து வருகிறது.

இது குறித்து ரவி நாயர் என்பவரது டுவிட்டர் பதிவில், ‘‘மதசார்பற்ற குடியரசு நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உலக இந்து மாநாட்டில் எப்படி கலந்துகொண்டார். அரசு பணத்தில் பயணம் செய்த அவர் ஆர்எஸ்எஸ், விஹெச்பி தலைர்களுடன் எப்படி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி குறித்து இந்துத்துவா அமைப்பினர் சமூக வலை தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை பார்த்தேன். ஆனால் இதில் ஒருவர் கூட எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பாஜக ஆதரவாளர்கள் பதில் டுவிட் செய்துள்ளனர். அதில்,‘‘இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய நிகழ்வுகளில் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்துகொண்டார்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு ரவி நாயர் அளித்துள்ள பதிலில்,‘‘ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் அரசியலமைப்பு பதவியில் இல்லை.

ஆனால் வெங்கைய நாயுடு தற்போது நாட்டின் துணை ஜனாதிபதியாக இருக்கிறார். அதனால் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது’’ என்று பதிலளித்தார். இது போல் பலரும் வெங்கைய நாயுடு பங்கேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.