காங்கிரஸ் ஆதரவு கம்யூனிஸ்ட்களுக்கு வெற்றி…..பாஜக.வை எதிர்க்கும் அணியில் இணைகிறது சிபிஎம்

ஐதராபாத்:

2019 லோக்சபா தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக காங்கிரஸ், இதர மதசார்பற்ற ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்ட அணி அமைக்க சிபிஎம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐதராபாத்தில் அக்கட்சியின் 22வது மாநாடு நடந்தது. இதில் இத்தகைய கூட்டணி அமைக்கும் முன்மொழிவை கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கொண்டு வந்தார். இதற்கு கட்சி ஒப்புதல் அளித்தது.

காங்கிரஸ் கட்சியுடனான இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரகாஷ்காரத் தலைமையிலான அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் 786 பிரதிநிதிகளுடன் ஆதரவு இருந்ததால் சீத்தாராம் யெச்சூரியின் முடிவுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது.

கேரளாவில் வலுவான அமைப்பாக உள்ள பிரகாஷ் தலைமையிலான அணியினரை நேரடியாக எதிர்க்க யாரும் தயாராக இல்லை. எனினும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் இதற்கு தீர்வு கிடைத்துவிட்டது. அரசியல் சார்ந்த இந்த முக்கிய தீர்மானம் தொடர்பாக 47 பிரதிநிதிகள் உரையாற்றினர். இதில் 373 திருத்தங்கள் கொண்டு வர முன்மொழிவு செய்யப்பட்டது. ஆனால், இதில் 37 திருத்தங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.