சென்னை: சிபிஐ கஸ்டடியில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இது தொடர்பான  வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு சென்னை பூக்கடை  என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. அப்போது, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி பதுக்கி வைத்திருந்த சுமார்,  400.47 கிலோ தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதமற்கிடையில்,  பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைத்து பூட்டப்பட்டு, சிபிஐ முத்திரையுடன் சீல் வைக்கப்பட்டது. லாக்கரில் வைக்கப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு ராமசுப்பிரமணியன் என்ற பொறுப்பு அதிகாரியை நியமித்தது. அந்தப் பாதுகாப்புப் பெட்டகங்களின் 72 சாவிகளும், 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததற்கான ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேண்டா்டு சாா்ட்டா்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் பெற்ற கடன் தொகையான ரூ. 1,160 கோடியை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சுரானா நிறுவனத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த தங்கத்தை அண்மையில் எடை போட்டு பாா்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது.  400.47 கிலோ  அளவிலான தங்கம் வைக்கப்பட்ட நிலையில், அதில், 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டாா். இது தொடா்பாக  சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், சத்தியசீலன் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை  அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த சம்பவம்  சுரானா நிறுவன ஊழியா்கள், சிபிஐ அதிகாரிகள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும், அங்குள்ள சிசிடிவி புட்டேஜ்களும் ஆய்வு செய்யப்பட்டன.

இதில்,  முக்கிய ஆதாரமாக 22 நிமிட விடியோ ஆதாரம் சிபிசிஐடிக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில்,  தங்கம் வைத்திருந்த பாதுகாப்பு பெட்டகத்துக்கு அதிகாரிகள் சென்று வந்தது தொடா்பானது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விடியோவை ஆய்வு செய்யும் பணியில் சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.  இனி தொடர்ந்து விசாரணை நடக்கும் என்றும், யார், யாரை விசாரிப்பது என்பது பற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்படி விசாரணை நடைபெறும் என்றும் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் வீடியோ ஆதாரம் சிக்கியுள்ளது,  சுரானாவில் ரெய்டு நடத்திய அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.