கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ: அரசு தரப்பு மறுப்பு

திருவண்ணாமலை:

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக பரப்பப்படும் தகவலை அரசு தரப்பில் மறுத்துள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் தனநாராயணன் (வயது 16). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் 24-ம் தேதி தனநாராயணன் கிணற்றில் தவறி விழுந்தார்.
தீயணைப்பு துறையினர் தனநாராயணன் உடலை மீட்டனர். அவரை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்து உடலை அங்கேயே விட்டு சென்றனர்.

அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர் சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து விவசாய நிலத்திலேயே ஜீவசமாதி நிலையில் தனநாராயணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில் சிறுவனின் புகைப்படத்துடன் அருள்மிகு தவராஜ பாலயோகி சிவானந்த பரமஹம்ச தனநாராயணர் ஜீவசமாதி நிலையம் செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவனின் சமாதியை அவரது குடும்பத்தினர் மற்றும் சிலர் பூஜித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவன் அடக்கம் செய்யப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.

பத்மாசன நிலையில் அமர்ந்து இருக்கும் சிறுவனின் உடலை தூக்கி வைத்து அடக்கம் செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இதனையடுத்து சிறுவனின் மரணம் குறித்து விசாரணை நடத்த திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

அதேசமயம், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த புகாரில், கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக தகவல் பரப்பப்படுகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டார் என்று தவறான தகவலை சமூக வலைதளத்தில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட தனநாராயணன் பிளஸ்-1 வகுப்பை தொடரவில்லை. அவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் ஒருவரின் அருளாசி பெற்று தியானம் செய்து வந்ததாக சிறுவனின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

தனநாராயணன் கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உரிய தகவல்கள் சேகரிக்காமலும், அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும் இருந்ததாகக் கூறி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவை, தூசி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றியுள்ளதாக திருவண்ணாமலை எஸ்பி. சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

You may have missed