முதல்வர் பழனிச்சாமி பெண் வாக்காளருக்கு பணம் அளித்தாரா? : அதிர்ச்சி தகவல்

சேலம்

நேற்று சேலத்தில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பெண்ணுக்கு பணம் அளிக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை தமிழகம் எங்கும் நடைபெறுகிறது. இதை ஒட்டி நேற்று மாலையுடன் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. திமுக தலைவர் உள்ளிட்டோர் சென்னையில் தங்கள் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை நடத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் பிரசாரம் செய்தார்.

பழனிச்சாமி வீதிவீதியாக வாக்கு சேகரிக்கும் போது ஒரு பெண்ணிடம் அவர் நோட்டிஸ் கொடுத்து வணக்கம் சொல்லி இருக்கிறார். அப்போது பின்னால் வரும் தொண்டர் ஒருவர் பழனிச்சாமியிடம் பணம் கொடுத்தார். அதை வாங்கி அந்த பெண்ணிடம் அப்படியே பழனிசாமி அளித்துள்ளார். இது வீடியோ பதிவாக்கப்பட்டு வைரைலாகி உள்ளது.

 

திமுகவினர் இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்பு கனிமொழி ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஆரத்தி தட்டில் பணம் போட்டதற்காக தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்ததை சுட்டிக் காட்டி தற்போது முதல்வர் நேரடியாகவே பணம் அளிப்பதாக கூறியது. மேலும் இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது எனவும் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதிமுக தனது டிவிட்டர் பக்கத்தில், “தனக்கு அன்புடன் வாழைப்பழம் அளித்த அக்காவுக்கு முதல்வர் அதற்கான பணத்தை அளிக்கிறார். டீ குடித்தாலும் பணத்தை அளிக்காத திமுகவுக்கு இது வாக்குக்கு பணம் கொடுத்தது போல தெரிகிறது. விவசாயின் நண்பரான முதல்வருக்கு எதிராக இதை திசை திருப்புவது திமுகவின் தேர்தல் பயம்” என பதியப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி