கொலைப்பட்டியலில் விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமாரின் பெயர்!:  உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு

ந்துத்துவ அமைப்ப்பு ஒன்றின் கொலைப்பட்டியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் பெயர் இருப்பதை கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு உறுதி செய்துள்ளது.

கன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்ற பயங்கரவாதியை கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அவர்களால் கொலை செய்யப்படவேண்டுமென
34 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதை புலனாய்க்குழு அறிந்தது.

34 பேரில்  8 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 26 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே பகுத்தறிவாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் என்றும், அந்த கொலைப் பட்டியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாலளும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ரவிக்குமார் தெரிவிக்கும்போது,  “இது எனக்கு மட்டுமல்ல..மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கும் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. கொலைக்குழுக்கள் கொல்வது, அச்சுறுத்துவது என்பது ஒருபுறம்..  இன்னொரு பக்கம் பாஜக ஆளும் மாநிலங்களில் பொய்வழக்கு தொடுப்பதும் தொடர்கிறது. நேற்றுகூட இதுபோன்ற ஒரு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் தடுத்துள்ளது.

மேலும் இந்த கொலைமிரட்டல் பாஜக – வலதுசாரி சிந்தனைகளை விமர்சிக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை” என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி , “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு இந்துத்துவாவாதிகளால் ஆபத்து என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு தமிழக அரசு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.