சென்னை

மெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் பற்றி அவருடைய சித்தி சரளா கோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தலில் அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  கமலா ஹாரிஸ் தென் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர் ஆவார்.   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துலசேந்திரபுரம் இவர் சொந்த ஊர் ஆகும்.  கமலாவின் வெற்றியை இங்குள்ளோர் பட்டாசு வெடித்து, இனிப்பு அளித்து கொண்டாடி உள்ளன்ர்.

கமலா ஹாரிஸ் துணை அதிபரானதும் தனது உரையில் தனது தமிழ்நாட்டுப் பூர்விகம் குறித்துப் பேசி உள்ளார். கமலா, ”எனது தாய் சியாமளா என்னையும் எனது சகோதரியையும் பெருமையான வலிமையான கறுப்பின பெண்களாக வளர்த்துள்ளார்.  எங்களது இந்தியக் குடும்ப பெருமைகளையும் அவர் சொல்லி உள்ளார்.  குடும்பம் என எனது மாமாக்கள் மற்றும் சித்திகளைச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அவருடைய இந்த உரை அமெரிக்க வாழ் இந்திய மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.   குறிப்பாக அமெரிக்காவில் ஆண்டி எனச் சொல்வதை அவர் சித்தி எனக் குறிப்பிட்டது தமிழர்களை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் பெருமை அடைய வைத்துள்ளதாக கலிஃபோர்னியாவை சேர்ந்த ஐடி நிறுவன உரிமையாளர் ரங்கசாமி புகழ்ந்துள்ளார்.

கமலா குறிப்பிட்ட அவருடைய சித்தி சரளா கோபாலன் சென்னையில் வசித்து வருகிறார்.    அவர் கமலா ஹாரிஸ் குறித்து, “நாங்கள் என்றுமே கமலாவை ஒரு நன்கு வளர்க்கப்பட்ட குழந்தையாகக் கருதி வருகிறோம்.  அவர் எங்கு இருந்தாலும், சரி தான் அடைய விரும்பும் உயரம் மற்றும் தகுதியைக் கடின உழைப்பால் அடைவார்.  “ எனப் புகழ்ந்துள்ளார்