சென்னை

ற்போது தமிழகத்தில் வசித்து வரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை நீக்கம் செய்தது. அத்துடன் காஷ்மீர் மற்றும் ஜம்மு என  இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. லடாக் பகுதி சட்டப்பேரவை அற்று யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில நாட்கள் முன்பிருந்தே தொலைபேசி, இணையம் உள்ளிட்டவை முடக்கப்பட்டன.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பலர் இந்தியா எங்கும் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, உள்ளிட்ட பல பகுதிகளிலும் அவர்கள் வசிக்கின்றனர். தோல் பொருள் வர்த்தகம் காரணமாக சென்னைக்கு ஐந்து வருடம் முன்பு குடி பெயர்ந்துள்ள இம்ரான் கான் என்பவர், “மத்திய அரசு தனது குழப்பத்தினால் காஷ்மீரிகளுக்கு துரோகம் செய்துள்ளது. எங்களுக்கு மத்திய அரசு தவறிழைத்து விட்டது. காஷ்மீர் மாநில  மக்களுக்கு இது சரியானது இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக மாணவரான மற்றொரு காஷ்மீரி ஷேக் ஆசிஃப் மஜீத், “இந்த நிகழ்வு எனக்கு பணமதிப்பிழப்பு நாட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தற்போது அதே நிலையில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள்   நிலைகுலைந்துள்ளனர். எங்களில் 80% பேர் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறோம். இது குறித்து மக்கள் கருத்தை வாக்கெடுப்பு மூலம் தெரிந்த பிறகு மத்திய அரசு முடிவு எடுத்திருக்க வேண்டும். “ எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கலைப்பொருள் விற்பனையகத்தில் பணி  புரியும் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஷாகித், “இந்த அரசியல் நிகழ்வால் காஷ்மீர் மக்கள் பாதிப்படைவார்களா அல்லது முன்னேற்றம் அடைந்து பலம் பெறுவார்களா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போது எனது குடும்பத்தைப் பற்றிய கவலை மட்டுமே எனக்கு உள்ளது. கடந்த ஞாயிறு முதல் குடும்பத்தினரிடம் எவ்வித தொடர்பும் இன்றி உள்ளதால் கவலை அதிக்ரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.