பெங்களூரு: வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாகும். இதுகுறித்து இந்திய அணியின் 2 முக்கிய டெஸ்ட் வீரர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவும், டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானேவும்தான் அவர்கள். பகலிரவு டெஸ்ட் போட்டி என்பது இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளுக்குமே முதல் அனுபவம்.

அதுவும் இந்தியாவில் இத்தகைய டெஸ்ட் போட்டி முதன்முறையாக நடக்கிறது. இப்போட்டியில் இளஞ்சிகப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படுவது வழக்கம்.

“துலீப் டிராபி தொடரில் ஏற்கனவே இளஞ்சிகப்பு நிறப் பந்தில் ஆடியுள்ள‍ேன். அந்த அனுபவம் இப்போது கைகொடுக்கும் என நம்புகிறேன். பகலில் பிரச்சினையில்லை. ஆனால், மாலை மற்றும் இரவு துவங்கும் நேரத்தில், பந்தைக் கணித்து பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்றுள்ளார் புஜாரா.

“முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் என்பது ஒரு புதிய சவால்தான். இதைப் பற்றி அதிக தெளிவில்லை. அதேசமயம், பயிற்சியின் மூலமாக ஐடியா கிடைக்குமென நம்புகிறேன். இளஞ்சிகப்பு நிறப் பந்தில் ஆடுவது பெரிய சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றுள்ளார் ரஹானே.