டாக்கா

ங்க தேசத்தில் திருமணத்தின் போது ஒரு பெண் தான் கன்னி எனச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்க தேசம் ஒரு இஸ்லாமிய நாடு ஆகும். அந்த நாட்டில் பல இஸ்லாமியச் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி திருமணத்தின் போது ஒரு பெண் தன்னைப் பற்றி விவரம் அளிக்க மூன்று விருப்பத் தேர்வு அளிக்கப்படுகின்றன. அவற்றில் முதலில் கன்னி எனவும் இரண்டாவது விதவை எனவும் மூன்றாவது விவாகரத்தானவர் எனவும் உள்ளது. இந்த மூன்றில் ஒன்றை மணமகள் தேர்வு செய்ய வேண்டி உள்ளது.

சமீப காலமாக வங்க தேசத்தில் பெண்கள் உரிமைக் குரல் அதிக அளவில் எழுந்து  வருகின்றன. பெண்ணிய ஆர்வலர்கள் இந்த முறையை எதிர்த்துப் போராடி வருகின்றன. ஆணுக்கு இது பொல்ல எவ்வித ஒரு விவரம் அளிக்கத் தேவை இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றக்கோரி பெண்ணுரிமைக் குழுக்கள் கடந்த 2014 ஆம் வருடம் வழக்கு தொடர்ந்தன. ஆனால் அரசு இந்த வேண்டுகோளுக்கு எதிராக வாதிட்டு வந்தது.

இந்நிலையில் வங்க தேச உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. அந்த தீர்ப்பில் இனி மணப்பெண் தான்  கன்னி எனக் குறிப்பிட்டுச் சான்றளிக்கத் தேவை இல்லை என அறிவித்துள்ளது. இதற்குப் பல பெண்ணுரிமை ஆர்வலர்கள் தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முடிவை எடுத்து பெண்ணுரிமைக்குப் பாதுகாப்பு அளித்துள்ளதாக அவர்கள் புகழ்ந்துள்ளனர்.

இது குறித்து வங்கதேச சட்ட அமைச்சர், எனக்கு இந்த தீர்ப்பின் முழு விவரம்  மற்றும் நகல்கள் வரவில்லை. எனவே அது வந்த பிறகு தான் நீதிமன்றம் எந்த ஒரு அடிப்படையில் இத்தகைய முடிவு எடுத்தது என்பதைச் சொல்ல முடியும். அதுவரை என்னால் இதுகுறித்து ஏதும் சொல்ல முடியாது. உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்புண்டு அல்லது நிராகரிக்கவும் வாய்ப்புண்டு” எனத் தெரிவித்துள்ளார்.