விஹாரியின் ஆட்டம் சதமடித்ததற்கு சமம்: அஸ்வின் புகழாரம்

சிட்னி: மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், தன்னுடன் சேர்ந்து அனுமன் விஹாரி ஆடிய ஆட்டம் சதத்திற்கு ஒப்பானது என்று புகழ்ந்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

மிகவும் நெருக்கடியான சூழலில், இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற, அஸ்வினுடன் இணைந்து 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் விஹாரி.

மொத்தம் 161 பந்துகளை சந்தித்த அவர் எடுத்தது 23 ரன்கள் மட்டுமே. அந்தளவிற்கு ஒரு பொறுமையான இன்னிங்ஸை, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளித்து ஆடினார் காயத்துடன். அஸ்வின் 128 பந்துகளை சந்தித்து 39 ரன்கள் மட்டுமே அடித்தார். இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வாழ்வையே வெறுக்கச் ச‍ெய்துவிட்டனர்.

இந்நிலையில்தான், விஹாரியின் ஆட்டத்தை புகழ்ந்துள்ளார் அஸ்வின். “ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் என்பது எளிதானதல்ல. புஜாராவும், ரிஷப் பன்ட்டும் அவுட்டான பிறகு வெற்றிபெறுவது கடினமாகிவிட்டது. இந்நிலையில், அணியை தோல்வியிலிருந்து மீட்க வேண்டியதாகிவிட்டது.

எனவே, விஹாரியின் ஆட்டம் பெருமைக்குரியது. அவரின் ஆட்டம் 100 அடித்ததற்கு சமமானது” என்றுள்ளார் அஸ்வின்.