‘சர்க்கார்’ படத்துக்கு ஆதரவாக அரிவாள் காட்டி மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் அதிரடி கைது

சென்னை:

‘சர்க்கார்’ படம் சர்ச்சைக்குள்ளானபோது, விஜய்க்கு ஆதரவாக அரிவாள் காட்டி மிரட்டல் வீடியோ வெளியிட்ட  விஜய் ரசிகர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தீபாவளியின்போது வெளியான சர்க்கார் படம் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது. தொடக்கத் தில் படத்தின் கதை திருட்டுக்கதை என வழக்கு தொடரப்பட்டு, பின்னர் சமரசம் ஏற்பட்டது. இந்த நிலையில் படம் வெளியானதும், படத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர் போன்றவைகளை உடைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதால், அதிமுக வினர் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்தை தொடர்ந்து படம் மீண்டும் திரையிடப்பட்டது. அந்த சமயத்தில், விஜய் ரசிகர்கள் பலர் ஆவேசமாக அரசுக்கும், அதிமுகவுக்கும்  எதிராக குரல் கொடுத்தனர்.

பலர் அரசின் விலையில்லா மிக்சிகளை உடைப்பது போன்று வீடியோ எடுத்தும், பலர் அரசுக்கு மிரட்டல் விடுப்பது போன்றும் பேசிய வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் மேலாக, விஜய் ரசிகர் ஒருவர் அரிவாளை கையில் வைத்துக்கொண்டு அரசை மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், அரிவாளை காட்டி மிரட்டிய  சென்னையைச் சேர்ந்த லிங்கதுரை, சஞ்சய், அனிஷேக் (வீடியோவை பதிவுசெய்து வெளி யிட்டவர்) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த வீடியோ காரணமாக சஞ்சய் மற்றும் அனிஷேக் இருவரையும் அதிரடியாக கைது செய்த   போலீஸார், அவர்கள்  பயன்படுத்திய அரிவாள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  லிங்கதுரை தலைமறைவானர். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.