கொசஸ்தலை ஆற்றை கமல் ஆய்வு (!) செய்தது முக்கிய செய்தியாக ஊடகங்களில் வெளியானது. அவரைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் இது போன்ற “ஆய்வு”களில் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

ஆனால் கமல் ரசிகர்கள் அமைதியாக இருக்க.. விஜய் ரசிகர்கள் களம் இறங்கத் துவங்கியிருக்கிறார்கள்.

பாலத்தை ஆய்வு செய்யும் விஜய் மன்ற பொறுப்பாளர்கள்

தமிழகம் முழுதும தனது ரசிகர்களை அந்தந்த பகுதி பிரச்சினைகள் குறித்து “ஆய்வு” செய்யும்படி தனது மக்கள் மன்றத்தினருக்கு விஜய் உத்தரவிட்டிருப்பதாக ஒரு செய்தி பரவியிருக்கிறது. தனது அரசியல் நுழைவுக்கு இது உதவும் என்று விஜய் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சையில் பிரச்சினைக்குரிய பாலம் ஒன்றை “ஆய்வு” செய்திருக்கிறார்கள், தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தின் தலைவர் சரவணனும், மாநகர தலைவர் ஆனந்தும்.

தஞ்சையில் மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள இந்த பாலம் கட்டப்பட்டிருக்கும் முறை, விபத்துக்கள் ஏற்படும் வகையில் இருக்கறது என்றும், பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் புகார்கள் எழுந்துள்ளன. பல்வேறு அமைப்புகளும், கட்சியினரும் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த வாரம், அந்த பாலத்தை விஜய் மக்கள் மன்ற தஞ்ச மாவட்ட தலைவர் சரவணன், தஞ்சை மாநகர தலைவர் ஆனந்த் ஆகியோர் ஆய்வு (!) செய்திருக்கிறார்கள்.

ஆனந்த் – சரவணன்

இது குறித்து சரவணனை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், “எங்களது தலைமையைப் பொறுத்தவரை, உள்ளூர் மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுங்கள்.. பெரிய அளவிலான விவகாரம் என்றால் எங்களை கலந்து ஆலோசியுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளனர்.  இப்படி அறிவுறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதன்படி பல வருடங்களாக பலவித பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறோம். மீத்தேன் விவகாரத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியபோது நாங்களும் கலந்துகொண்டோம்.

அது போலத்தான் புதிய மேம்பாலம் குறித்து பலவித சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதைப் பார்வையிட்டோம்.

மற்றபடி கமல் கொசஸ்தலை ஆற்றைப் ஆய்வு செய்த்தற்கும் நாங்கள் தஞ்சை பாலத்தை ஆய்வு  செய்யததற்கும் தொடர்பில்லை.” என்றார் சரவணன்.

தஞ்சை மாநகர தலைவர் ஆனந்த்  “அந்த பாலம், மேரீஸ் கார்னர் பகுதியில் பள்ளிக்கு முன்பாக சட்டென இறங்குகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே பாலத்தை இன்னும் நீடித்து பள்ளியைத் தாண்டி முடிவடையும் வகையில் கட்ட வேண்டும். அதே போல பாலத்தில் சில விரிசல்கள் விழுந்துள்ளன. இதையும் உரிய பொறியார்களை வைத்த சோதனை செய்ய வேண்டும்” என்றார்.

எப்படியோ பொது விசயங்கள் குறித்து பலரும் கேள்வி கேட்பதும் ஆய்வு செய்வதும் நல்லதுதானே!