விஜய் படங்களும் அரசியல் சர்ச்சைகளும்…  ஒரு பார்வை!

தனது 44 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விஜய், தனது “சர்கார்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  உடனே, “சர்கார் என்ற பெயரை சென்சார் போர்டு ஏற்குமா? தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காதா? படங்களில் சிகரெட் பிடிக்கமாட்டேன் என்ற விஜய் இந்தப் பட போஸ்டரில் சிகரெட் பிடிப்பதுபோல போஸ் கொடுத்திருக்கிறாரே? ஏற்கெனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இப்போதும் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?” என்றெல்லாம் சர்ச்சைகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன.

விஜய் படங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏற்கெனவே சர்ச்சைகளைச் சந்தித்த அவரது படங்கள் குறித்து ஒரு பார்வை…

துப்பாக்கி (2012): 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் இராணுவ வீரராக நடித்திருந்தார் விஜய். மும்பையில்  ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் தீவிரவாதிகளை தேடித்தேடி அழிப்பார். இந்தப் படத்தின் சில காட்சிகள், குறிப்பிட்ட சில இஸ்லாமிய அமைப்புகளை தாக்குவதாக உள்ளதாக சர்ச்சை ழுந்தது. பிறகு, அந்த இஸ்லாமிய அமைப்புகளிடம் விஜய் தரப்பினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.  பிரச்சனை தீர்க்கப்பட்டது.

தலைவா (2013): 

விஜய் படத்திலேயே அரசியல் பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்பட்டது இந்தப் படம்தான். ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் விஜய் மும்பை வாழ் தமிழ் மக்களின் தலைவராக வந்தார்.

இப் படத்தின் தலைப்பில் ‘டைம் டு லீட்’ (Time to Lead) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இது ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சியினருக்கு எரிச்சலூட்டியது.

விஜய் அரசியலுக்கு வருவார் என்பதையே இந்த வாசகம் குறிப்பிடுவதாக அவர்கள் நினைத்தனர். அதனால் படத்தை வெளிவிடாமல் பலவித தடைகளை ஏற்படுத்தினர்.

இதையடுத்து அந்த வாசகம் நீக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களில் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், இந்தப் பிரச்சனை காரணமாக தமிழகத்தில் சில தினங்கள்  கழித்தே வெளியானது. இதனால், படத்தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

கத்தி (2014): 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த  இரண்டாவது இது.  விவசாயிகள் பிரச்சனையைப் பற்றி பேசும் இப்படத்தில், முன்னணி குளிர்பான நிறுவனத்தைப் பற்றியும், சர்வதேச நிறுவனங்கள் தங்கள் லாபத்திற்காக அத்தியாவசிய பொருட்களை வீணடிப்பது பற்றியும் விமர்சனம் செய்யப்பட்டது.

இப்படத்தை தயாரித்தது ‘லைகா’ நிறுவனம்.  இந்த நிறுவனத்தின் அதிபர்கள், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் உறவினர்கள் என்ற புகார் எழுந்தது. இதனால், படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. பிறகு அந்த நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் இருந்து எடுத்தப் பின்னரே படம் வெளியானது.

(அதன் பிறகு லைகா நிறுவனம் தமிழில் தற்போது வரை பல படங்களை தயாரித்துள்ளது என்பதும், அந்தப் படங்களுக்கு இதுவரையில் எவ்வித பிரச்சனைகளும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெறி (2016): 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் இது.  பெரும் வெற்றி பெற்ற படம்.

ஆனால் இந்தப் படத்தை செங்கல்பட்டு பகுதிகளில் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவித்தனர். இதற்கு, திரையரங்கு உரிமையாளர்களுக்கும், படத் தயாரிப்பாளர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடே காரணம். பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது.

மெர்சல் (2017): 

விஜய் நடித்த படங்களிலேயே மிக அதிக வசூலை குவித்த படம். அதோடு மிக அதிக சர்ச்சைகளை சந்தித்த படமும் இதுதான்.

இப் படம் வெளியாவதற்கு முன்பாகவே, படத்தின் தலைப்பு காரணமாக பிரச்சனை எழுந்தது. கடைசி நேரத்தில் அந்தப் பிரச்சனை தீர்ந்தது.

அடுத்ததாக, படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டலாக படத்தில் விமர்சிக்கப்பட்டதாக மத்தியில் ஆளும் பாஜகவினர் பிரச்சினையை கிளப்பினர்.

இதனால் பாஜக கட்சிக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல்கள் உருவானது.  பிறகு அந்தக் காட்சிகள் மியூட் செய்யப்பட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

சர்கார்

இப்போது சர்கார் படம் குறித்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது.