Random image

சர்கார் படத்தில் ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறாரா விஜய்?

விஜய்யின் சர்கார் படம் ஆரம்பித்ததில்  இருந்தே சர்ச்சைதான்.  குறிப்பாக வருண் ராஜேந்திரன் என்பவர், தனது  “செங்கோல்” கதையை ஏ.ஆர்.முருகதாஸ் காப்பி அடித்து சர்கார் படத்தை எடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.  நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.

ஆரம்பத்தில், “அப்படி எல்லாம் இல்லை. சர்கார் எனது சொந்தக்கதை” என்று கூறிவந்த ஏ.ஆர். முருகதாஸ் பிறகு வருண் காந்தியுடன் சமரசம் செய்துகொண்டார். ஒருவழியாக இந்த சர்ச்சை ஓய்ந்தது.

அடுத்து சர்கார் படம் வெளியான திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிட பல மடங்கு அதிகமாக ரூ.1500 வரை டிக்கெட் விற்கபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஜெயலலிதா

இப்போது அடுத்த சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

படம் முழுதுமே அரசியல் வசனங்கள் தூள் பறத்துகின்றன. மேலும், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க கண்டெய்னர் லாரியில் பணத்தைக் கடத்துவதாகவும் ஒரு காட்சி வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தேர்தல் நேரத்தில்  இப்படியோர் சம்பவம் நடந்த்து அனைவரும் அறிநத்தே. திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் பிடிபட்ட பணக்கட்டுகள் கொண்ட அந்த கண்டெய்னர் லாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. “அது ஜெயலலிதாவுக்குச்  சொந்தமான பணம்” என்று அரசியல் தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.

ஆகவே சர்கார் படத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து நடிகை வரலட்சுமி நடித்திருக்கும் வில்லி கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்ட பெயரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்காக அப்பாவை கொலை செய்து, பெற்ற தாயையும் கொல்லத் துடிக்கும் அளவுக்கு போகிறது வரலட்சுமி ஏற்றிருக்கும் கொடூர கதாபாத்திரம். இதற்கு  கோமலவள்ளி” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளிதான்.

“கண்ட்டெய்னர்ல கோடி, கோடியா பணத்தை கடத்துனவங்க எல்லாரும், அது என்னாச்சுன்னு தெரியாமலேயே மாசக் கணக்கா பெட்ல இருந்தே செத்துப் போய்ட்டாங்க..”  என்று ஒரு வசனம் வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது நடந்த தேர்தல் ஒன்றின்போது, பணம் நிரப்பப்பட்ட கண்டெய்னர் திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டது. இது  ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்று தகவல் பரவியது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும்கூட கருத்து தெரிவித்தனர்.

தவிர ஜெயலலிதா நீண்டநாட்கள் மருத்துவமனையில் இருந்து எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று முழுமையாக அறிவிக்கப்படாமலேயே மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

ஆகவே சர்கார் படத்தில் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டுத்தான் அந்த வசனம் வைக்கப்பட்டிருக்கிறது என்று ஜெயலலிதா ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் இது குறித்து தெரிவிப்பதாவது:

“நடிகர் விஜய் தனது தகுதிக்கு மீறி அரசியல் ஆசை கொண்டிருக்கிறார். இவரை விட  பெரிய நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோர்கூட ஜெயலலிதா இருந்தபோது அரசியில் பேசாமல் பயந்து ஒதுங்கி இருந்தனர். ஆனால் விஜய்யோ தனது அரசியல் ஆசையை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக தான் நடித்த தலைவா படத்தில் time to lead (தலைமை ஏற்கும் நேரம்) என்று கேப்சன் வைத்தார். இதற்கு அப்போது ஜெயலலிதா ஆதரவாளர்கள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது. அந்த  படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. படத்தின் தயாரிப்பாளர், “படத்தை வெளியிடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்” என்றெல்லாம் அறிவித்தார். பிறகு உடல் நலமில்லை என்று மருத்துவமனையில் சேர்ந்தார்.

இந்த நிலையில் பயந்து போன விஜய், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்போது ஜெயலலிதா  நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் இருந்தார்.

விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் அங்கு சென்றனர். ஆனால் பங்களாவுக்குச் செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் விஜய்யுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.

இந்த தகவல்கள் வெளியானவுடன், விஜய் ரசிகர்கள் சிலர் ஜெயலலிதாவை விமர்சிக்கத்துவங்கினர். ஆனால் பதறிப்போன விஜய், தனது ரசிகர்கள் து குறித்து பேசக்கூடாது என்று உத்தரவிட்டார்.

 

விஜய் – வரலட்சுமி

அதே போல விஜய்யின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலிட உத்தரவு காரணமாக நிகழ்ச்சி நடத்த இடம் அளித்திருந்த கல்லூரி கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதனால் பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.

இதுவும் விஜயக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆட்சி அதிகாரத்துக்குப் பயந்து  மவுனமாக இருந்தார்.

இப்போது ஜெயல்லிதா மறைந்துவிட்ட நிலையில், தனது ஆத்திரத்தை பழி தீர்க்க வில்லி கதாபாத்திரத்துக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்லி என்று பெயர் சூட்டியிருக்கிறார்” என்கிறார்கள்.

இன்னொரு புறம், “இந்த விவகாரத்தில் விஜய்க்கு மட்டுமல்ல.. படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸுக்கும் தொடர்பு இருக்கலாம். ஏனென்றால் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான முட்டல் மோதல் குறித்து அனைவரும் அறிவர்” என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் விஜய் தரப்பினரோ, “அந்த கதாபாத்திரத்துக்கு கோமலவள்ளி என்று பெயர் வைத்தது எதேச்சையாக நடந்ததுதான். விஜய் படம் என்றாலே எதற்கெடுத்தாலும் சர்ச்சையைக் கிளப்ப சிலர் கிளம்புகின்றனர்” என்கிறார்கள்.

ஆனால் ஜெயலலிதா ஆதரவாளர்கள், “திரைப்படத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைவது என்பது தமிழகத்தில் காலம்காலமாக இருந்துவருகிறது. அந்தவகையில் தானும்  தனது திரைப்படங்கள் மூலம் அரசியலில் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார் விஜய். அதற்கேற்பத்தான் அவரது படங்களில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு சர்கார் படமும் விதிவிலக்கல்ல. ஆகவே இத்தனை கவனத்துடன் இருக்கும் விஜய், வில்லி கதாபாத்திரத்துக்கு எதார்த்தமாக கோமலவள்ளி என பெயர் வைத்திருப்பார் என்பது நம்புபம்படியாக இல்லை. உடனடியாக கோமலவள்ளி என்ற வார்த்தை வரும் இடங்களில் மியூட் செய்ய வேண்டும். விரைவில் இது குறித்து வெளிப்படையாக குரல் எழுப்புவோம்” என்கிறார்கள்.

கதை, அதிக கட்டணம்.. ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சர்கார்.