20 லட்சம் கோடி நிவாரணத்துக்காக எனது கடன் முழுவதும் செலுத்துகிறேன் : விஜய் மல்லையா

டில்லி

பிரதமரின் 20 லட்சம் கோடி நிவாரண நிதிக்காகத் தனது கடன் முழுவதையும் செலுத்துவதாகவும் தன் மீதுள்ள வழக்குகளை கை விட வேண்டும் எனவும் விஜய் மல்லையா கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா விமான நிறுவனம், மது பான தொழிற்சாலை எனப் பல தொழில்களை நடத்தி வந்தார்.  அவர் வங்கிகளில் இருந்து வாங்கிய ரூ.9000 கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை.  இதனால் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து  நாட்டை விட்டு லண்டனுக்குத் தப்பி ஓடி விட்டார்.  அவரை மீண்டும் இந்தியா அழைத்து வந்து வழக்குகளை விசாரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது.

தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியா கொண்டு வந்துள்ள ஊரடங்கால் அனைத்து தொழிலும் முடங்கிப் போய் உள்ளன.  இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது  இதற்கான மீட்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் தொலைக்காட்சியில் பேசிய போது ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் வழங்க உள்ளதாக அறிவித்தார்.  அதில் ரூ.6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதற்கு நாட்டை விட்டுத் தப்பி ஓடிய விஜய் மல்லையா டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.  அவர் தனது பதிவில் ” கொரோனா வைரஸிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தமைக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.  இதற்காக இந்திய அரசு தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். நான்  எனது சிறு பங்களிப்பாக எனது  100 சதவீதம் கடனையும் வங்கிகளிடம் திருப்பிச்செலுத்துகிறேன்

இதே கோரிக்கையை நான் பலமுறை விடுத்தும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு நான் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன்,  இதை ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் ” என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.