லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு!!

ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றார். இதையடுத்து அவர் மீது நீதிமன்றத்தில் பல்வேறு வழங்குகள் தொடரப்பட்டன. அமலாக்கத்துறையும், சிபிஐயும் பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர்.

vijay

இதில் வங்கிகளில் கடன்பெற்று விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்கும்படி இந்தியா சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது இந்திய அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தீர்ப்பு வெளியாக உள்ளதால் இந்திய அரசின் பொருளாதார அமலாக்கத்துறை உயரதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ. உயரதிகரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் சாய் மனோகர் தலைமையில் லண்டனிற்கு விரைந்தனர்.
தற்போது அந்த வழக்கில் எதிர்ப்பார்த்தப்படி தீர்ப்பு வெளியாகியுள்ளது. லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் படி அந்நாட்டு அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அவர் இந்தியா கொண்டுவரப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.

கடந்த வாரம் வங்கிகளில் தான் பெற்ற முழு கடனையும் நூறு சதவிகிதம் செலுத்தி விடுவதாக விஜய் மல்லையா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.