பீர் பாட்டில்களுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விஜய் மல்லையா

--

ல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்து இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பீர் பாட்டில் படங்களுடன் ட்விட்டரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவருக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன..

இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தவிர மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

லண்டன் நீதிமன்றத்தில்  இது குறித்து வழக்கு தொடுத்த அவர், இந்திய சிறைச்சாலைகளில்  அடிப்படை வசதிகள் இல்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்திய சிறைகளில் உள்ள வசதிகளை வீடியோ எடுத்து லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஆறரை லட்சம் பவுண்டுகள் கட்டி ஜாமினில் அவர் வெளியே வந்தார். அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.

ஆனாலும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உற்சாகமாக உலாவரும் அவர், அவ்வப்போது ட்விட்டரில் கிண்டலும் கேலியுமாக பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் பதிவிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.

பீர் பாட்டில்கள் உள்ள படத்துடன்,  “தீபாவளி வித் கிங் பிஷர்” என்று அதில் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.