பிரிட்டனில் புகலிடம் கோரியதன் எதிரொலி: மல்லையாவை நாடு கடத்துவது தாமதமாகலாம் என தகவல்

டெல்லி: விஜய் மல்லையா பிரிட்டனில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்து உள்ளதால் அவரை நாடு கடத்தும் நடைமுறைகள் மேலும் தாமதமாகலாம் எனறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9000 கோடிரூபாய் கடன் பெற்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, அதனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, அவர் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான விசாரணை நடந்து முடிந்துவிட்டது. ஆகையால் அவர் கூடிய விரைவில் நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மல்லையாவை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட, உச்ச நீதிமன்றம் இது குறித்து கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, வெளியுறவு செயலாளருக்கு, உள்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் இங்கிலாந்தில் மல்லையா தொடர்பாக நடக்கும் சட்டப்பூர்வ மேல் நடவடிக்கைகள் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. இந் நிலையில், விஜய் மல்லயா பிரிட்டனில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்து உள்ளதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடைமுறைகள் மேலும் தாமதமாகலாம் எனறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரிட்டன் சட்டப்படி, ஒருவர் தஞ்சம் கோரும் போது அது தொடர்பாக முடிவு எடுக்கும் வரை சம்பந்தப்பட்ட நபரை நாடு கடத்த முடியாது. மல்லையாவுக்கு பிரிட்டனில் அரசியல் ஆதரவு இருப்பதால், அவர் தஞ்சம் கோரும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தஞ்சம் கோரும் மல்லையாவின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அதன் மூலம், மல்லையாவை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஜனவரி மாதம், உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.