Random image

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் ரூ.8.75 கோடிக்கு ஏலம்

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் 8 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. வாராக் கடன் விவகாரத்தில் மல்லையாவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட்டன.

mallaya

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தவில்லை. வங்கி நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் விஜய் மல்லையா மீது விசாரணை நடத்தப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் விதமாக விஜய் மல்லையா 2015ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார்.

வங்கி மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மல்லையா தேடப்படும் குற்றவாளியாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பேரில் அவர் மீதான விசாராணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மும்பையின் ஜுகு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 5 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் ஈரோ காப்டர் பி 155 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்களை டெல்லியைச் சேர்ந்த சவுத்ரி ஏவியேஷன் என்ற நிறுவனம் மின்னணு ஏல முறையில் வாங்கியுள்ளது. ஒவ்வொரு ஹெலிகாப்டரும் தலா 4 கோடியே 37 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் இந்த ஹெலிகாப்டர்களை ஏலம் விடுத்துள்ளது. வாராக் கடன் விவகாரத்தில் மல்லையாவுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டு, 17 வங்கிகளின் சார்பில் கடன் மீட்பு தீர்ப்பாயம் இந்த ஏலத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.