ஐதராபாத்: கடந்த 2016ம் ஆண்டு, ஐதராபாத் பல்கலைக்கழகத்திலிருந்து, ரோஹித் வெமுலாவுடன் வெளியேற்றப்பட்ட சக மாணவர் விஜய் பெடாபுடி, ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஐதராபாத் பல்கலையின் பி.எச்டி. மாணவரான இவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பொதுத் தொகுதியில் போட்டியிட முடிவுசெய்து பலரையும் வியக்க வைத்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு, ரோஹித் வெமுலா மற்றும் இவருடன் சேர்த்து, மொத்தம் 5 மாணணவர்கள், ஐதராபாத் பல்கலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன்பொருட்டு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் மற்றும் அது ஒடுக்கப்பட்ட விதம் போன்றவை, இவரது மனஉறுதியை அதிகப்படுத்தியதாக இவர் கூறுகிறார்.

பொதுத் தொகுதியில் போட்டியிடும் முடிவு குறித்து கேட்டபோது இவர் கூறியதாவது, “அட்டவணை சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டுமென்ற ஒரு மனப்பாங்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை உடைத்து, அவர்கள் விரும்பும் தொகுதியில் சுதந்திரமாக போட்டியிட வேண்டுமென்பதே எனது எண்ணம்.

எனது ஜாதி எது என்பதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மாறாக, அதைவைத்து என்னை ஏளமாக பார்ப்போர்தான் சிறுமைப்பட்டு போவார்கள்” என்றார்.

– மதுரை மாயாண்டி