வரும் 15ந்தேதி சென்னையில் விஜயகாந்த் நேரடி தேர்தல் பிரச்சாரம்?

சென்னை:

டல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வருகின்ற 15ம் தேதி  சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய  இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரரவாக விஜயகாந்த்  தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என தேமுதிகவினர் எதிர்பார்த்த நிலையில், அவரது உடல்நலத்தை கருத்தில்கொண்டு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் கடந்த வாரம் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவில், அவரது குரல் ஓரளவு தேறி வருவதை உறுதி செய்ய முடிந்தது. அதில்,  தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போர் என்றும், விரைவில் வருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் 15ந்தேதி வடசென்னையில் மட்டும் பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.  வட சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும்  தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து அன்று  ஒருநாள் மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் கர்ஜனையை கேட்க அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.