சென்னை:
ரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்தான் கொடுக்க முடியும் என அமைச்சர்கள் குழு தெரிவித்ததால் விஜயகாந்த் விரக்தியில் உள்ளார்.


தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இதே கூட்டணியை வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர கூட்டணி கட்சி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற கட்சிகள் மும்முரம் காட்டின. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக நாங்கள் தான் 3வது பெரிய கட்சி தங்களுக்கு 41 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், அதிமுக தலைவர்கள் தேமுதிகவை ஒரு பொருட்டாவே கண்டு கொள்ளவில்லை.

இதனால் விரக்தியடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘ராமதாஸை தேடி தேடி சென்று கூட்டணி குறித்து பேசும் அமைச்சர்கள், தங்களை மதிப்பதில்லை’’ என வெளிப்படையாகவே குமுறி இருந்தார். ‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அதிமுக, தேமுதிகவை உதாசீனப்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தேமுதிக வாக்கு வங்கி மிகக்குறைவாக உள்ளதாலும், செல்வாக்கு குறைந்துவிட்டதாலும் அவர்களுக்கு 4 முதல் 8 சீட் வழங்கலாம் என அதிமுக தலைமைக்கு தேர்தல் ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதனால், கடும் அதிருப்தியில் உள்ள பிரேமலதா விரைவில் எங்களை அழைத்து பேசவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என தெரிவித்திருந்தார். இருப்பினும், அதிமுக அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சில நாட்களுக்கு முன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது கட்சியின் அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு குறைந்தது 2 எம்எல்ஏக்களாவது வெற்றி பெற வேண்டும். அல்லது 6 சதவீத ஓட்டுக்கள் பெற வேண்டும். அதிமுக கூட்டணியில் இருந்தால் இது நடக்காது. பாமக நம்மை வெற்றி பெறவும் விடாது. எதிர்பார்த்த சீட்டுக்களை தரும் நிலையில் அதிமுகவும் இல்லை. எனவே நமக்கு அதிமுக கூட்டணி வேண்டாம் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் தனித்து போட்டியிடுவதும் ஒத்து வராது என்றும் கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல், தேமுதிக தலைமை குழப்பத்தில் உள்ளது. சிலர் கமல் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளது. அடுத்த பாஜவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா உறுதியாக இருப்பதால், கூட்டணியை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்றிரவு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரண்டு கட்சியினரும் பேசிக்கொண்டனர். தேமுதிக தரப்பில் விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். அப்போது, பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுத்து உள்ளீர்கள். எங்களுக்கு 20 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு அமைச்சர்கள், ‘‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால் 14 தொகுதிகள் தருகிறோம். பேச்சுவார்த்தை என்று இழுக்க வேண்டாம். ஒரே பேச்சுதான். சீட் வேண்டுமா, வேண்டாமா வேண்டும் என்றால் நாங்கள் கொடுக்கும் 10 சீட்டை வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் விருப்பம்’’ என்று கூறிவிட்டனர். இதனால் அவர்கள் முடிவு எடுக்காமல் உள்ளனர். இதையடுத்து, உங்கள் முடிவை விரைவில் சொல்லுங்கள், முதல்வர், துணை முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என அமைச்சர்கள் கூறி விட்டு சென்றனர். பாமகவுக்கு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி அதிக சீட்டுகளை கொடுத்து உள்ளதால் விஜய்காந்த் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூறிய 10 சீட்டுக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்தால் நாளை இரண்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, விஜயகாந்த தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் கூட்டணி குறித்து கே. பி. முனுசாமி எம்பி, அமைச்சர்கள் வேலுமணி அவர்கள், தங்கமணி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் சந்தித்து பேசினர்’’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கூட்டணி இறுதியாகவில்லை என வெளிப்படையாக தெரிகிறது.