விஜயகாந்த் போல வேறு தலைவர்கள் இல்லை!: அனிதா இறுதிச் சடங்கில் நெகிழ்ந்த மக்கள்

நீட் குழப்படியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட விஜயகாந்தை, அங்கிருந்த மக்கள் நெகிழ்ந்து பேசினார்கள்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊருக்கு செல்வார்.  அந்த வகையில்  வாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனிதாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதாக தீர்மானித்திருந்தார். ஆனால்  அங்கிருந்து அவர் கிளம்ப தாமதம் ஏற்பட்டது.

கட்சி நிர்வாகிகள்சிலர்  ”இப்போதே ஏழு  மணி ஆகிவிட்டது இனிமேல் அங்கு செல்ல அந்திநேரமாகிவிடும். நாளை அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லிக்கொள்ளமே” என்று கூறினர்.

ஆனால்  விஜயகாந்த் ”பரவாயில்லை. வண்டியை எடுங்கள்.  அனிதாவின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

பிறகு அவசர அவசரமாக புறப்பட்டிருக்கிறார்கள்.  அரியலூர் வந்த போது அம் மாவட்டசெயலாளர் ராமஜெயவேலிடம் விஜயகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதற்கு அவர் ”அனிதாவின் உடலை எடுத்துவிட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதற்கு விஜயகாந்த் “ டாக்டர் ஆகமுடியவில்லையே என்று மனவிரக்தியில் அந்த சிறுமி இறந்திருக்கிறார். அவரைப் பார்க்காமல் சென்றால் நான் எல்லாம் என்ன தலைவன். ஆயிரகணக்கான அனிதாக்களின் மனகுமுறலை வெளிபடுத்தியிருக்கிறார் இந்த அனிதா. சுடுகாட்டிலாவது  அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு போவோம்” என்று விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

பிறகு அனிதாவின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துவந்து எரிப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் சரியாக 10.45 க்கு குழூமுர் வந்தார் விஜயகாந்த். அவரை பார்த்ததும் தொண்டர்கள் சத்தமிட்டனர். உடனே விஜயகாந்த்,  ”சத்தம் போடக்கூடாது…  எங்க வந்திருக்கோம்னு தெரியதா” என்று அதட்ட.. அந்த இடத்தில் அமைதி நிலவியது.

பிறகு அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு அனிதாவின் முகத்தையே சில நிமிடங்கள் பார்த்த போது  விஜயகாந்த்  கண்கள் கலங்கின. பிறகு  கண்ணை துடைத்துகொண்டு வெளியே வந்த போது செய்தியாளர்கள் அவரை அணுகினர்.  அதற்கு அவர் ”நான் இந்த இடத்தில் பேச விரும்பவில்லை” என்று கலங்கிய குரலில் கூறிவிட்டு  காரில் ஏறி சென்றார்.

அங்கிருந்த மக்கள், “ பல தலைவர்கள் அனிதாவின் மரணத்திலும் அரசியல் செய்கிறார்கள். ஆனால் விஜயகாந்த், மனதார அஞ்சலி செலுத்தவே வந்து சென்றிருக்கிறார். அவரைப்போல சிறந்த தலைவர்கள் வேறு யாரும் இல்லை” என்று கூறி நெகிழ்ந்தார்கள்.