சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் விஜயகாந்த், பிரசார வாகனத்தில் நிற்க முடியாத நிலையில், அவதியுடன் வாகனத்தின் கம்பியின்மீது கையை ஊன்றி, மவுனமாகவும், அவ்வப்போது கையை மட்டும் காட்டி வாக்கு சேகரித்தது தேமுதிக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக தேர்தல்களம் அனல்பறந்து வருகிறது. அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தேமுதிக தலைமை, உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்தையும் களமிறக்கி உள்ளது. அவரது உடல்நிலை பிரசாரத்துக்கு ஒத்துழைக்காத நிலையில், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் 5 நாட்கள் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளார். நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கும்மிடிபூண்டி தொகுதி தே.மு.தி.க.., வேட்பாளர் கே.எம்.டில்லி மற்றும் பொன்னேரி அமமுக வேட்பாளர் பொன்.ராஜா ஆகியோரை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திறந்த வேனில் வந்த அவர் சிறிது நேரம் வாகனத்தில் இருந்து வெளியே வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்தும் வணக்கம் தெரிவித்துக் கொண்டும் ஆதரவு திரட்டினார். பின்னர் வாகனத்தில் உள்ளே சென்று அமர்ந்து அவர் வணக்கம் தெரிவித்தபடியே சென்றார். அவரால் தொடர்ந்து நிற்க முடியாத நிலையே காணப்பட்டது. சிறிது நேரம் எழுந்து வாகனத்தின் கைப்பிடியை பிடித்து, அதன்மீது சாய்ந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருவதும், சிறிது நேரத்தில், சீட்டில் அமர்ந்து கொள்வதுமாக பெரும் அவஸ்தையுடன் அவரது பிரசாரம் அமைந்தது.

விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என அறிவிக்கப்பட்டும், அவர் முன்பைப்போல கம்பீரமாக வந்து உரையாற்றுவார் என அவரது தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், அவரால் நிற்ககூட முடியாமல் மவுனமாக சென்றதை கண்ட தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் தொண்டர்களில் மத்தியில், சோகத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் விஜயகாந்த் பேச்சை கேட்பதற்காக ஆவலுடன் வந்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.