Random image

“விஜயகாந்த் கம்பீரக் குரலுடன் களமிறங்குவார்!” : விஜய பிரபாகரன்

சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் கம்பீரக் குரலுடன் களம் இறங்குவார் என அவர் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.     அனைவருக்கும் ஒரே ஊதியம்,, ஊதிய உயர்வு உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.    இன்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் விஜய பிரபாகரன். “நாங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்க வந்துள்ளோம்.   நாட்டிற்கு ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.   ஆசிரியர்கள் பெரியதாக எதையும் கேட்கவில்லை.   அனைவருக்கும் ஒரே ஊதியம் என்பதை மட்டுமே அவர்கள் கேட்கின்றனர்.

இதற்காக ஆசிரியர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார்கள்.    ஆயினும் வரும் ஆண்டு முதல் இந்த ஊதிய உயர்வு அ:ளித்தால் போதும் என அவர்கள் கூறி உள்ளனர்.  நிச்சயம் அரசு இதை பரிசீலனை செய்ய வேண்டும்.  இங்கு ஆசிரியர்கள் போராடும் போது நாம் புத்தாண்டை கொண்டாடக் கூடாது.  ஆகவே புத்தாண்டுக்குள் இவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

சேலம் – சென்னை நெடுஞ்சாலை அமைக்க ஒரு மரத்துக்கு ரூ.40000 அளிக்க அரசு தயாராக உள்ளது.  அவ்வாறு இருக்க இவர்கள் கேட்பதை கொடுப்பதில் என்ன தவறு உள்ளது?   ஆட்சியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இருந்துள்ள போதிலும் இந்த  பிரச்னை தொடர்கிறது..

அரசால் ஒரு ரத்தத்தை பரிசோதிக்கும் அடிப்படையைக் கூட செய்ய முடியவில்லை.  அதனால் அரசு எவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.  விரைவில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும்.   தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவர் அறிவிப்பார்.   விரைவில் விஜயகந்த் கம்பீரக் குரலுடன் வந்து பரப்புரை மேற்கொள்வார்” என தெரிவித்துள்ளார்.