“குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கதிராமங்கலத்தில் மீத்தேன் வாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசியர் ஜெயராமன் உள்ளிட்டோரை நேரில் மு.க. ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பிறகு  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

 

“கதிராமங்கலத்தில் நடந்துக் கொண்டிருக்கும் போராட்டத்தையொட்டி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பத்து பேரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிரது மாநில அரசு.  இன்று காலை நான் கதிராமங்கலம் பகுதிக்கு நேரடியாகச் சென்று,  மக்களோடு கலந்துப் பேசி ஆறுதலையும், அவர்களதுப் போராட்டத்துக்கு திமுக சார்பில் எனது ஆதரவையும் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன்.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜெயராமன் அவர்களையும், அவருடன் உள்ள பத்து பேரையும் பார்த்து பேசினேன்.

இதில் கொடுமை என்னைவென்றால், அண்மையில் பேராசிரியர் ஜெயராமன் அவர்களுடைய தகப்பனார் மறைந்த நேரத்தில், அவர் ஜாமீன் கேட்டு மனு போட்டிருக்கிறார். நீதிமன்றத்தில், அவருக்கு எந்தக் காரணத்தை கொண்டும் பரோல் கொடுக்கக் கூடாது என்று அரசுத்தரப்பில், காவல்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அதையும் மீறி, நீதிபதி மூன்று நாட்கள் பரோல் அளித்திருக்கிறார். தந்தையின் இறுதிக் காரியங்களை எல்லாம் செய்து முடித்து விட்டு, இப்போது மீண்டும் சிறைக்கு வந்திருக்கிறார் ஜெயராமன்.

ஆகவே, சிறையில் இருக்கும் அவரைப் பார்த்து, அவருடைய தந்தையார் மறைவுக்கு இரங்கலையும், தி.மு.க.வின் ஆறுதலையும் தெரிவித்தேன்” என்று தெரிவித்த ஸ்டாலின், தொடர்ந்து, “சென்னை கமிஷனர்  குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சொல்லியிருக்கிறார்.  அப்படியானால் முதலில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கரை தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, இப்போது டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திரன் அவர்களை கைது செய்ய வேண்டும். அடுத்ததாக, கமிஷனராக இருந்த ஜார்ஜ் அவர்களையும் கைது செய்து விட்டு, அதை விற்றுக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கைது செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.