புதுக்கோட்டை:

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.  இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி உள்பட சொத்துகளை முடக்க வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு தினகரன் அணியினர் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார் எழுந்த போது, இந்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய பங்கு வகித்ததாக வருமானவரித்துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து விஜயபாஸ்கரின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களா, எழும்பூரில் உள்ள சகோதரி வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள உதவியாளர் நைனார் வீடு, நந்தனம், தி.நகரில் உள்ள உறவினர் வீடு, சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 7ம் தேதி சோதனை நடத்தினார்கள்.

இதே போல விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் இலுப்பூர் சவுராஸ்டிரா தெருவில் உள்ள வீடு மற்றும் அலுவலகம், மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், சித்தன்னாவாசல் அருகே திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி ஆகிய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இலுப்பூர் வீடு, கல்வி நிறுவனங்கள், குவாரி ஆகிய இடங்களில் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இதனை அதிகாரிகள் எடுத்துச் சென்றன. மேலும் விஜயபாஸ்கர் இலுப்பூர் வீட்டில் சில ஆவணங்களை ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த சோதனையை அடுத்து விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமார், தந்தை சின்னதம்பி இருவரும் ஏப்ரல் 8ம் தேதி திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள்.

இதையடுத்து 11ம் தேதி திருவேங்கைவாசல் மற்றும் முத்துடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரியை மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பிறகு விஜயபாஸ்கர், அவருடைய மனைவி, தந்தை, அண்ணன் ஆகியோர் அவ்வப்போது சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்கள். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த கல்குவாரி அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர்  யாருடைய பெயரிலும் இல்லாமல், அவரது வீட்டில் வேலை பார்க்கும் எஸ்.ஏ சுப்பையா என்பவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இலுப்பூரில் வீட்டில் சீல் வைக்கப்பட்ட அறையை கடந்த மே 17ம் தேதி திறந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு ஒரு பெட்டியில் இருந்த சில ஆவணங்களை எடுத்து சென்றார்கள்.

இந்த நிலையில் நேற்று வருமானவரித்துறையினர் விஜயபாஸ்கரின் திருவேங்கைவாசல் குவாரி அமைந்துள்ள 100 ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை முடக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சார்பதிவாளருக்கு கடிதம் அனுப்பினார்கள்.

இந்த நிலையில் மாவட்ட பதிவாளர் சசிகலா புதுக்கோட்டையிலிருந்து, விருதுநகர் மாவட்ட பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.