விஜய் நடிக்கும் 61 வது படம் அட்லி இயக்கத்தில் உருவாகி வருகிறது. விஜய் மூன்று வேடத்தில் நடிக்க… அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

நாளை 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள். இதை  முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பரிசாக இன்று புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

காளைமாடுகளின் பின்னணியில்  அசத்தலாக போஸ் கொடுக்கிறார் விஜய். ஜல்லிக்கட்டு வீரர் போல அவரது தோற்றம் இருக்கிறது.

இதுதான் தற்போது பலவித யூகங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

“படத்தில் விஜய்யின் மூன்று வேடங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு வீரர்” என்று கூறப்படுகிறது.

இதையடுத்து,  ““ஜல்லிக்கட்டுக்கு எதிராகவே மத்திய பாஜக அரசு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் பல்வேறு தடைகளை போட்டிருக்கிறது.

இதற்கு மக்கள் மத்தியில்.. குறிப்பாக தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  இதற்கு உதாரணமாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக சென்னை மெரினாவில் தன்னெழுச்சியாக கூடிய இளைஞர் கூட்டத்தைச் சொல்லலாம்.

இந்த உணர்வைத்தான், தனது புதுப்படத்தில் விஜய் வெளிப்டுத்தி இருக்கிறார்.  ஆகவே இயல்பாகவே, மத்திய பாஜக அரசுக்கு எதிரான வசனங்கள் படத்தில் இருக்கும்” என்று ஒரு யூகமும் கிளம்பியிருக்கிறது.

இதற்கு வலு சேர்க்க ஒரு சம்பவத்தையும் சொல்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

சமீபத்தில் நடந்த, “பிகைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது”  வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியதுதான் அது.

அந்த விழாவில் விஜய், “மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால், அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.

வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்” என்று பேச.. அதற்கு ஏக ரெஸ்பான்ஸ்.

“ “வல்லரசு, வல்லரசு” என்று பேசிக்கொண்டிருக்கும் பாஜகவை குறிவைத்தே விஜய் பேசினார்” என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து படத்தில் அதிரடி வசனம் பேசுவது விஜய்க்கு புதிது அல்ல.

அவரது, “கத்தி” படத்தில் ““2ஜி-ன்னா என்ன..? வெறும் காத்துய்யா… அதுலேயே ஊழல் பண்ணின தேசம் இது!’, என்றும் ‘ஒருத்தன் 5,000 கோடி கடன் வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுனு சொல்வான். அவனை இந்த நாடு ஒண்ணும் பண்ணாது; ஆனா 5,000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி, பணத்தைக் கட்டலைனா அவனை தற்கொலை செய்யவெச்சிரும்!’ என்றும் உணர்ச்சிகரமாக வசனம் பேசி கைதட்டல் வாங்கியவர்தான் விஜய்.

ஆகவே, ஜல்லிக்கட்டு விவகாரத்தை முன்வைத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக புதிய படத்தில் விஜய் வசனங்கள் பேசியிருப்பார் என்று ஒரு யூகம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதே நேரம் பாஜக ஆதரவாளர்கள் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.

அவர்கள், “சூப்பர் ஸ்டார் ரஜினிகூட தனது படங்களில் ஏகப்பட்ட அரசியல் அதிரடி வசனங்கள் பேசியிருக்கிறார். ஆனால் நிஜத்தில் அரசியலில் காலெடுத்து வைக்க அத்தனை யோசிக்கிறார்.  அவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில்கூட, அரசியல் விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதுங்குகிறார்.

ஆகவே திரைப்படத்தில் வரும் வசனங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

விஜய் நடித்த “கத்தி” படத்தில் அந்நிய நாட்டு குளிர்பாணங்களுக்கு எதிராக வசனம் பேசி கைதட்டல் வாங்கினார். ஆனால் அவரே அந்நியநா்ட்டு குளிர்பாண விளம்பரங்களில் நடித்தவர்தானே.

ஆகவே திரைப்ட வசனங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. தவிர மத்திய பாஜக அரசையோ, பிரதமர் மோடியையோ நேரடியாக தாக்கி வசனங்கள் இருக்குமானால் சென்சார் போர்டு அனுமதித்திருக்காதே. ஆகவே இதை ஒரு விவகாரமாக நாங்கள் நினைக்கவே இல்லை” என்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக  பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வந்த மோடியை விஜய் சந்தித்தார் என்பதையும் பாஜக ஆதரவாளர்கள் சொல்லிச் சிரிக்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க விசயம்( !): “இளைய தளபதி” என்ற தனது பட்டத்துக்குப் பதிலாக, வெறும் தளபதி என்று இந்த படத்தின் போஸ்டரில் போட்டுக்கொண்டிருக்கிறார் விஜய்.

பிரமோஷன்?