‘சர்க்கார்’ கதை திருட்டு கதைதான் இயக்குனர் முருகதாஸ் ஒப்புதல்: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை:

சர்க்கார் படத்தின் கதை தொடர்பாக வழக்கு தொடர்ந்த கதாசிரியர்  வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் சமரசம் பேசியுள்ள நிலையில், சர்க்கார் படக்கதை வருண் ராஜேந்திரனின் கதைதான் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கதையை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் திருடி இருப்பதும் நிரூபணமாகி உள்ளது. ஏற்கனவே கத்தி படத்தின் கதையும் திருடப்பட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் உடன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

இந்த வழக்கில், வழக்கு தொடர்ந்த கதாசிரியர் வருண் ராஜேந்திரன் பெயரை படத்தின் டைட்டிலுடன்  சேர்க்க சன் பிக்சர்ஸுக்கு உயர்நீதி மன்றம் கூறி உள்ளது. வழக்கின் தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை எனவும், செங்கோல் என தான் எழுதிய கதையினை திருடி இயக்குநர் முருகதாஸ் சர்கார் திரைப்படத்தினை எடுத்திருப்ப தாகவும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏற்னவே நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது,  வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்துள்ள புகார் தொடர்பாக பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென் னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கம் ஆகியோர் வரும் 30ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள சர்கார் படத்தின் கதை தொடர்பான வழக்கில் மனுதாரர் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வழக்கு தொடர்ந்த வருண் ராஜேந்திரன் என்பவரும், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, படத்தின் டைட்டிலுடன் வருண் ராஜேந்திரன் பெயரை சேர்க்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ்க்கு உத்தரவிட்ட நீதி மன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இதற்கிடையில், வருண்  ராஜேந்திரனின் செங்கோல் படக்கதையும், முருகதாஸ் இயக்கி உள்ள சர்க்கார் படத்தின் கதையும் ஒன்றே என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த விவகாரம் குறித்து,   பேசித் தீர்க்க நினைத்தோம், ஆனால் இயக்குனர் முருகதாஸ் மறுத்துவிட்டார் என்று சங்க தலைவர் கே.பாக்யராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  மனுதாரர் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ள என்றும், மனுதாரரின் வழக்கறிஞருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுள்ளதாக சன் பிக்சர்ஸ் மற்றும் முருகதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.

மனுதாரர் வழக்கறிஞர் இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பும் பின்னர் வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக தீபாவளிக்கு சர்க்கார் படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதையும் திருடப்பட்டதுதான் என்று தஞ்சை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்டஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த அன்பு. ராஜசேகர் என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.