சென்னை: வருவாய் இழப்பை காரணம் காட்டி 118 ஊழியர்களை விகடன் குழுமம் பணிநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
2 நாட்களில் மட்டும் அந்த நிறுவனத்தில் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் நிருபர்கள் உட்பட 118 ஊழியர்களை விகடன் குழுமம் பணிநீக்கம் செய்ததால் ஊடகத் துறை கொதித்து போய் இருக்கிறது. வெள்ளிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் விஜய்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கூறுகையில், இந்த நடவடிக்கைக்கு எந்த காரணமும் வழங்கப்படவில்லை.
நானும், எங்கள் அணியில் இருந்த மற்றவர்களும் அழைக்கப்பட்டோம். அன்றைய தினம் பணிநீக்கம் பற்றி பேசினார்கள். பணித்திறன் குறைவு என்பது இதன் பொருள் அல்ல என்று விளக்கினார்கள். எங்களுக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இன்று, நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன் என்று ஒரு அழைப்பு வந்தது. எனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்ப ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் தந்துள்ளனர் என்றார்.
பணிநீக்கம் தொடர்பாக நானும், இன்னும் சிலரும் நிர்வாகத்தை கண்டு காரணம் அறிய முற்பட்டோம். ஆனால் அது நடக்கவில்லை. நாங்கள் லாக்டவுன் நேரத்திலும் கூட மிக கடுமையாக உழைத்திருக்கிறோம் என்றும் கூறினார்.
விகடனின் செய்திப் பிரிவைச் சேர்ந்த 87 பேரும், வடிவமைப்பு, நிர்வாக ஊழியர்கள் எனபிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் உடனடியாக தங்கள் ராஜினாமாவை வழங்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. லாக்டவுன், புத்தக விற்பனையில் சரிவு உள்ளிட்ட பல காரணங்களை விகடன் குழுமம் முன் வைத்துள்ளது.
விகடன் குழு ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு பெரிய நிகழ்ச்சியையாவது நடத்தி விடுகிறது. இது வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாகும். லாக்டவுன் காரணமாக தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
இது குறித்து மனிதவள மேலாளரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2மாதங்களாக உற்பத்தி, வணிகம், விளம்பர வருவாய் ஆகியவற்றில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. வருவாயில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
இது எங்கள் பிராந்திய அலுவலகங்களில் சிலவற்றை மூடும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கூறுகையில், மனிதவளத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை முதல் ஊழியர்களை அழைக்கத் தொடங்கினர், மேலும் ஒரு மாத சம்பளத்திற்கு ஈடாக தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்புமாறு கூறி வருகின்றனர்.
மேலும் மனிதவள அதிகாரி நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்பட்டால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் வேலைகளைத் திருப்பித் தருவார்கள் என்று அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றாலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சென்னை மையம் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களின் இறுதி பட்டியல் குறித்த முடிவு மே 20 அன்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனத்தின் முடிவை எதிர்த்து, ஒரு சில விகடன் விருது பெற்றவர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளனர்.
பணிநீக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது விருதுகளை திருப்பித் தருவதாக ஆர்வலர், இயக்குநர் திவ்ய பாரதி மற்றும் வசனகர்த்தா மகிழ்நன் (காலா புகழ்) பகிரங்கமாக அறிவித்துள்ளனர். பணி நீக்கத்தை கண்டித்து விகடன் அலுவலகம் முன்பு ஊடகவியல் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு ஊடக அமைப்புகளும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.