ஸ்ரீஹரிகோட்டா:

நிலவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தற்போது விக்ரம்  நிலவை சுற்றி வருகிறது. வருகிற 7-ம் தேதி விக்ரம் நிலவில் தனது காலை வெற்றிகரமாக பதிக்க உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 என்ற விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ  விண்ணுக்கு அனுப்பியது. சுமார் 3840 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 முதலில் புவி சுற்று வட்டப் பாதையில் சுற்றி வந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி நிலவின் நீள் வட்ட சுற்றுப் பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அதன் சுற்றுவட்டப்பாதை ஏற்கனவே 4 முறை குறைக்கப்பட்ட நிலை யில், நேற்று மாலை 5வதுமுறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக சந்திரயான்-2  நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 127 கி.மீ. தொலைவிலும் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து,  சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் கலத்தை பிரிக்கும் நிகழ்வு இன்று  மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு வெற்றிகரமான நடைபெற்ற நிலையில்,   விக்ரம் கலம்  தனியே பிரிந்து இயங்கத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.

இதையடுத்து,  விக்ரம் விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதையை மேலும் குறைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி, 3-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், 4 ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரையும்  அதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் வெற்றிகரமான நடைபெற்றால், விக்ரம் குறைந்தபட்சம் 36 கி.மீ. தொலைவு கொண்ட நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் விக்ரம் வந்து விடும்.

இதைத்தொடர்ந்தே விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணிகள் தொடங்கும். இதற்கான பணிகள் வரும் 5ந்தேதி மற்றும் 6-ந்தேதிகளில் வெற்றிகரகமாக செய்து முடித்து, வரும் 7-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் விண்கலத்தை தரை இறக்கும் பணிகள் நடத்தப்படும்.

7ந்தேதி அதிகாலை  1.40 மணிக்கு விக்ரம் விண்கலம் கொஞ்சம் கொஞ்சமாக நிலவின் மேற்பரப்பு நோக்கி நகர்த்தப்பட்டு அடுத்தர 15 நிமிடங்களில் நிலவின் மேற்பரப்பில், அதாவது அதிகாலை 1.55 மணிக்கு  கால் பதிக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து அடுத்த 4 மணி நேரத்தில், விக்ரம் கலத்தில் இருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும். சுமார் அரைக்கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து செல்லும் பிரக்யான், தொடந்து 14 நாட்கள் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

இதே போன்று விக்ரம் கலமும், அது தரையிறங்கிய தென்துருவ பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் ஆய்வு பணியை மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பை ஆய்வுகள் செய்து படம் பிடித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல்களைத் தரும்.

நிலவில் எந்த அளவுக்கு தண்ணீர் மூலக்கூறுகள் உள்ளன? என்னென்ன கனிமங்கள் இருக்கின்றன என்பதையும் 2 விண்கலங்களும் ஆராயும். இது தொடர்பான படங்களையும் இரு விண்கலங்களும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.

இதனிடையே நிலாவை அடுத்த ஓராண்டு காலத்திற்கு சுற்றி வரும் சந்திரயான்-2 நிலாவை ஆராய்ந்து படங்களையும், தகவல்களையும் சந்திரயான்-2 இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.