விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 23ந்தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க திமுகவினருக்கு அன்பழகன் உத்தரவு

சென்னை:

திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப்டம்பர். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திங்கள் கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதியாகும்.

இதையடுத்து அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதையடுத்து, அங்கு  போட்டியிட விரும்புவோர்  23-09-2019 மாலைக்குள் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நேர்காணல் – 24-09-2019 அன்று நடைபெறும் என்றும்  கழக பொதுச்செயலாளர் பேராசிரியர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் வேட்பாளர் விண்ணப்பம் ரூ.25 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.