சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கடந்த  2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விக்கிரவாண்டி மற்றம் நாங்குனேரி தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்திருந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்தி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற 22சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓரளவுக்கு வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட அதிமுக, வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளரை விட சிறிய வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்  வெற்றி பெற்று விடலாம் என்று கனவுகாண்கிறது.

இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ள அதிமுக, அதற்காக தனது கட்சியினரிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. இன்று பிற்பகல் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தீவிர பிரசாரங்களை முன்னெடுக்க அதிமுக அமைச்சர்கள் தலைமையில் குழுக்களை அமைத்து வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக விக்கிரவாண்டி தொகுதியில் 3.87% வாக்குகள் குறைவாகவும், நாங்குனேரியில், 10.04% வாக்குகளை இழந்தும் தோல்வி அடைந்தது. அதுபோல லோக்சபா தேர்தலின்போது, இந்த தொகுதிகளின் வாக்குகள் ஓரளவுக்கு அதிமுகவுக்கு கிடைத்துள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் வெற்றிபெற முனைப்பு காட்டி உள்ளது.

லோக்சபா தேர்தலின்போது ஸ்டாலின் அறிவித்த கடன் தள்ளுபடி அறிவிப்புகளை, மோசடி அறிவிப்பு என்று குற்றம்சாட்டி வரும் அதிமுகவினர், இந்த இடைத்தேர்தலிலும் அதை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு உதாரணமாக வேலூர் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே திமுக வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம்,  இரு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.