புதுடெல்லி: இந்திய தலைநகரில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்ததோடு, 17 வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியின் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துவந்த போலீஸ் வாகனமும், வழக்கறிஞரின் கார் ஒன்றும் லேசாக மோதிக்கொண்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அந்த வழக்கறிஞரை அழைத்துச்சென்று காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த வழக்கறிஞரை விடுவிக்கக்கோரி இதர வக்கீல்கள் கோஷமிட்டனர்.

மாவட்ட நீதிபதிகள் தலையிட்டு காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னரும் குறிப்பிட்ட வழக்கறிஞர் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், போராட்டத்தில் இறங்கிய வழக்கறிஞர்களுக்கும் போலீசுக்கும் இடையில் மோதல் ஏற்படவே, போலீஸார் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு வழக்கறிஞர் காயமடைந்ததாகவும், இதனால் அந்தப் போராட்டம் பெரிய வன்முறையாக மாறி, சில காவலர்கள் உட்பட, பல வழக்கறிஞர்கள் காயமடைந்து, பல வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு களேபரங்கள் நடந்த பிறகே, சிறைபிடிக்கப்பட்ட காவலர் விடுவிக்கப்பட்டாராம். போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து, டெல்லி வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.