அடிப்படை வசதிகள் அமைத்து கொடுத்தால் புல்லட் ரெயிலுக்கு நிலம் : கிராம மக்கள்

பால்கர்

பிரதமரின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் அளிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பால்கர் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் கனவு திட்டம் என கூறப்படும் மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தை வரும் 2022க்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  இதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெருகிறது.   இந்த புல்லட் ரெயில்  பாதையில் 110 கீமீ தூரத்துக்கு மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இருந்து நிலம் கையகப்படுத்த உள்ளது.

இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் 22 கிராம மக்கள் நிலம் அளிக்க மறுத்துள்ளனர்.   அதே நேரத்தில் 50 கிராம மக்கள் ஒரு சில பொது கோரிக்கைகளுடன் நிலம் அளிக்க முன் வந்துள்ளனர்.   அவை, அடிப்படை வசதிகளான தெரு விளக்குகள், மருத்துவமனைகள்,  ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள்  செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.    அத்துடன் இந்த பகுதியில் உள்ள ஏரிக்கு சுற்றுச் சுவர் கட்டித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தேசிய அதிவேக ரெயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம், “நில உரிமையாளர்களின் கோரிக்கைகள் மற்றும் இழப்பீடு தொகை குறித்த எழுத்து பூர்வமான விண்ணப்பங்களை கேட்டுள்ளோம்.  அவர்களும் விரைவில் எழுத்து பூர்வமாக தங்கள் கோரிக்கைகளை அளிப்பதாக சொல்லி உள்ளனர்.   அந்த விவரங்கள் கிடைத்த பின்பு அது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.