புதுச்சேரி : மனைப்பட்டா தராததால் சுடுகாட்டில் மக்கள் குடியேற்றம்

தோத்தாம்பாக்கம், புதுச்சேரி

தோத்தாம்பாக்கம் கிராமத்தில் 32 ஆண்டுகளாக மனைப்பட்ட தராததால் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி மாநிலத்தில்  உள்ள தோத்தாம்பாக்கம் என்னும் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.    இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இங்குள்ள ஏழை மக்களுக்கு கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டன.  அதற்குப் பிறகு வழங்கவில்லை.

இதை ஒட்டி இந்த கிராம மக்கள் பல வித போராட்டங்களில் ஈடுபட்டனர்.   ஆனால் அரசு இவர்கள் போராட்டத்தைக் கண்டுக் கொள்ளவில்லை.   இதை ஒட்டி அவர்கள் புதுமைப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தினர்.

தங்கள் ஊர் சுடுகாட்டுக்கு தங்கள் பொருட்களுடன் சென்று குடியேறினார்கள்.   அத்துடன் அங்கேயே உணவு சமைக்கத் தொடங்கினர்.     இதை ஒட்டி அந்தப் பகுதி கடும் பரபரப்பில் ஆழ்ந்தது.

கிராம மக்கள் இந்த போராட்டத்துக்கு  பிறகாவது பட்டாக்கள் வழங்கப் படும் என எதிர்ப்பார்க்கின்றனர்.   அப்படியும் பட்டா கிடைக்கவில்லை எனில் சட்டப்பேரவை கட்டிடத்தில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர்.