Random image

புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் : குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு

ல்சாத், குஜராத்

புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் எடுக்க வந்த நில அளவு ஊழியர்களை தடுத்து குஜராத் விவசாயிகள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என அழைக்கப்படும் மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக பெருமளவில் நிலம் அரசால் கையகப்படுத்தப் படுகிறது.     இதில் பல விவசாயிகளின் விளை நிலங்களும் உள்ளதால்  விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்ஹில் உள்ள எண்டர்கோடா கிராமம் வழியாக இந்த புல்லட் ரெயில் அமைக்கப்பட உள்ளது.   எனவே இங்கு தேவையான நிலங்களை கையகப் படுத்த தேசிய  அதிவேக ரெயில் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.    இதற்காக நிலங்களை அளக்க மாவட்ட நில பதிவு அதிகாரிகளுடன் நிறுவனத்தின் நில அளவு ஊழியர்கள் சென்றுள்ளனர்.

அவர்களை நிலம் அளக்க விடாமல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.    இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதல் காவல் துறையினர் அந்த விவசாயிகளை விரட்டி அடித்துள்ளனர்.    நிலைமை மோசமானதால் அங்குள்ள பெண்களும்  போராட்டத்தில் இறங்கினர்.    அவர்களையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து கிராம விவசாயிகள் தலைவரான ஜிதுபாய் படேல், “எங்கள் விளை நிலங்களை எங்களைக் கேட்காமலே அபகரிக்க அரசு நினைத்துள்ளது.    காவல்துறையினரைக் காட்டி மிரட்டி நிலங்களை பறிப்பது அரசுக்கு சரியானதல்ல.    அவர்கள் இது வரை தங்களுக்கு தேவைப்படும் நில அளவு குறித்தோ மற்றும் இழப்பீடு எவ்வளவு என்றோ தெரிவிக்காமல் செயல் படுகின்றனர்.   எங்களை அடித்து விரட்டி விட்டு எங்கள் நிலங்களை அளக்கிறார்கள்”  என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வல்சாட் மாவட்ட நில பதிவு அதிகாரி பகோரா, “எங்கள் ஊழியர்கள் அங்கு நில அளவுக்கு சென்ற போதுஒரு சில விவசாயிகள் தடுத்துள்ளனர்.   அத்துடன் இழப்பீடு குறித்தும் கேட்டுள்ளனர்.   இது குறித்து நாங்கள் பதில் சொல்ல முடியாததால் அவர்கள் எங்கள் ஊழியர்களைத் தாக்க முற்பட்டனர்.   அதன் பிறகு காவல் துறை உதவியுடன் நிலம் அளக்கும் பணியை தொடங்கி உள்ளோம் ” என தெரிவித்துள்ளார்.