வங்கதேசத்துக்கு மின்சாரம் வழங்க அதானிக்கு எங்கள் நிலமா? : ஜார்கண்ட் கிராம வாசிகள்

கோடா, ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள கிராம வாசிகள் அதானி மின் உற்பத்தி நிறுவனத்துக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள மோடியா மற்றும் கங்க்டா பகுதியில் அதானி பவர் லிமிடெட் என்னும் மின் உற்பத்தி நிறுவனம் தனது அனல் மின் நிலையத்தை அமைத்துள்ளது.    இந்த மின் நிலையம் ஜார்க்கண்டில் அமைந்துள்ளதால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 25%  ஜார்க்கண்ட் மாநில மின்வாரியத்துக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள மற்றொரு அதானி மின் நிலையத்தில் இருந்து 25% மின்சாரத்தை அளித்து விட்டு இங்கு உற்பத்தியாகும் முழு அளவு மின்சாரமும் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.    வேறு ஒரு நிலையத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் மின்சாரம் பெறுவதால்  அதிக விலைக்கு வாங்க வேண்டி உள்ளது.   இவ்வாறு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் அரசுக்கு 25 வருடங்களில் சுமார் ரூ.7410 கோடி நஷ்டமாகும் என தணிக்கை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால் கோடா மாவட்ட கிராம வாசிகளுக்கு ஏற்கனவே நஷ்டம் ஆரம்பமாகி விட்டது.    அரசுக்கு அதானி நிறுவனம் மின்சாரம் விற்கும் முன்பே கிராம வாசிகளின் நிலம் கையகப்படுத்தப் பட்டுவிட்டது.    வழக்கமாக நிறுவனம் நேரடியாக நிலங்களை வாங்கும் வழிமுறைக்கு பதில் அரசு நிலங்களை கையகப்படுத்தி நிறுவனத்துக்கு அளித்துள்ளது.   இதனால் கிராம வாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிராம வாசிகள், “பொது நலனுக்காக எனக் கூறி எங்களிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப் பட்டன.   ஆனால் எங்களிடம் இருந்து கைப்பற்றிய நிலத்தில் அமைக்கப்படும் மின்நிலையத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரம் எங்களுக்கு கிடையாது என தெரிய வந்துள்ளது.   வங்கதேசத்துக்கு அதானி நிறுவனம் மின்சாரம் விற்க எங்கள் நிலத்தை நாங்கள் ஏன் இழக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பி உள்ளனர்.

தற்போது அரசு கையகப்படுத்தி உள்ள நிலங்கள் அனைத்தும் இருபோகம் விளையும் விவசாய நிலங்கள் ஆகும்.   இதற்காக அரசு இழப்பீடு வழங்கினாலும் இங்குள்ள மக்களுக்கு இது போல வளமான நிலம் கிடைக்காது என  மக்கள் தெரிவிக்கின்றனர்.   அத்துடன் தனியார் நிலங்களை ஒட்டி இருந்த பொது நிலங்களையும் அரசு அதானி நிறுவனத்துக்கு அளித்துள்ளது.   பொது நிலங்களில் இருந்த மாமரம் உள்ளிட்ட பல மரங்கள் வெட்ட்ப்பட்டுள்ளன.

விவசாயிகளின் அதிருப்திக் குரலுக்கு அதானி நிறுவனமும் ஆளும் பாஜக அரசும் சிறிதும் செவி சாய்க்காமல் உள்ளது.