’திருப்பதிக்கே குடிசை போட்டுக் கொடுத்த கிராம மக்கள்.’’


உயிரைக் காப்பாற்ற ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது, அரசாங்கம்.

இதனைப் பொருட்படுத்தாத நகரவாசிகள், போலீசில் சிக்கி மானத்தையும், வாகனத்தையும் இழந்தாலும் சொரணை வருவதில்லை.

ஆனால் கிராம மக்கள் ஊரடங்கை ஒழுங்காகக் கடை பிடிக்கிறார்கள்.

அதில் ஒரு கிராமம், மங்கபூர். தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ளது.

அந்த ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் திருப்பதி என்பவர் குஜராத் மாநிலத்துக்குச் சென்று, உயிர் காக்கும் மருந்துகளை , ஒரு மருத்து குடோனில் இருந்து ஏற்றி வந்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் மருந்துகளை இறக்கி விட்டு, ஊர் திரும்பிய திருப்பதியை ஊருக்குள் விட மறுத்து விட்டனர், கிராம மக்கள்.

‘’ 14 நாள் தனிமையில் இருந்து விட்டு, ஊருக்குள் வா’’ என்று கூறிவிட்டனர்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாகக் கொட்டகை ஒன்று கட்டி, அங்கு வாசம் செய்கிறார், திருப்பதி.

அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர் எல்லையில் ‘தனிமைச்சிறை’யில் வைக்கப்பட்டுள்ள திருப்பதிக்கு வீட்டுச் சாப்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மூன்று வேளையும் அவரது மனைவி சாப்பாடு எடுத்து வந்து, ‘சமூக இடைவெளி’ கடை பிடித்து, கணவனிடம் கொடுத்து விட்டுச் சென்று விடுகிறார்.

’அக்கரையில் அவள் இருக்க ,இக்கரையில் நான் இருக்க’’ என்று இரவு வேளைகளில் நொந்தபடி பொழுது கழிக்கும் திருப்பதி, ‘ஒன்று..இரண்டு’ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

பதினாலாவது நாள்தான் அவருக்கு, பண்டிகை நாள்.

– ஏழுமலை வெங்கடேசன்