வேலை வாய்ப்பு கோரி ஒற்றுமை சிலை முன் கிராமவாசிகள் போராட்டம்

ர்மதா மாவட்டம்

ற்றுமை சிலை என அழைக்கப்படும் சர்தார் படேல் சிலை முன்பு அருகிலுள்ள கிராமவாசிகள் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்தி உள்ளனர்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லப்பாய் படேலின் சிலைய மோடி திறந்து வைத்தார். பிரம்மாண்டமான இந்த சிலை மற்றும் அதற்கான சுற்றுப்புற கட்டுமானங்கள் நர்மதை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அணையை கட்டுவதற்காக இந்தப் பகுதியில் உள்ள ஆறு கிராம மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. அப்போது அவர்களுக்கு இழப்பீட்டு தொகையுடன் அரசு வேலை வாய்ப்பும் அளிக்கப்படும் என அரசு உறுதி அளித்தது. ஆயினும் இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது குறித்து அந்த கிராம மக்கள் குடியரசுத் தலைவர், பிரதமர், குஜராத் ஆளுநர், குஜராத் முதல்வர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர். அந்தப் பகுதியில் பல வேலை வாய்ப்புகள் உருவான போதிலும் தங்களுக்கு எதுவும் வழங்கவில்லை என அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்காத நிலையில் இந்த ஆறு கிராமங்களை சேர்ந்த 100 விவசாயிகள் ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் சர்தார் வல்லப்பாய் படேல் சிலை முன் அமர்ந்து போராட்டம் நடத்தி உள்ளனர். மற்ற போராட்டங்கள் போல் இல்லாமல் எந்த ஒரு அரசியல் தலைவரையும் அழைக்காமல் தங்கள் கிராமத் தலைவர்கள் தலைமையில் இந்த போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

அவர்கள் சிலை அமைந்த வளாகத்துக்கு வந்து அங்குள்ள டிக்கட் கவுண்டர் வரை வந்துள்ளனர். அங்கு மக்கள் உள்ளே செல்லும் நுழை வாயில் முன் அமர்ந்து கோஷங்களை எழுப்பி உள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அங்கு வந்து அவர்களிடம் பேசி கலைந்து போக வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் எந்த ஒரு கைதோ வன்முறையோ நடைபெறவில்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.