விழுப்புரம் மாணவி எரித்துக்கொலை: சிபிஐ விசாரணைக்கோரி வழக்கு…

சென்னை:

விழுப்புரம் அருகே குடும்ப தகராறு காரணமாக 10ம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  இந்த  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த  சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான  ஜெயபால் என்பவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்,  ஜெயபாலின் மகனை முருகன் தரப்பு தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜெயபால் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டுக்கு சென்ற முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர், அங்கிருந்த ஜெயபாலின் மகளின் கைகால்களை கட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தனர்.  இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த வாக்கு மூலத்தைத் தொடர்ந்து, முருகன், கலியபெருமாள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி கொலை வழக்கில்  கைதான இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால், வழக்கை  சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.