18 எம்.எல்.,ஏக்கள் தகுதி நீக்க வழக்கு….3-வது நீதிபதியாக விமலா நியமிக்க வாய்ப்பு

சென்னை:

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக அரசில் பல்வேறு குளறுபடிகள் நடந்தது. இதில் சசிகலா, டிடிவி தினகரன், அவர்களது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் அவர்களுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்கள் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.

இதனால் அதிமுக சட்டமன்ற கொறடா கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தரோ, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது தவறு என்றும், தகுதிநீக்கம் செல்லாது என்றும் தனது தீர்ப்பை அறிவித்தார்.


இதனால் இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரித்து இறுதி தீர்ப்பு அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. 3வது நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கை வாபஸ் பெற்று விடுவதாகவும் அந்தந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்குமாறும் 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன் அறிவித்தார். இந்நிலையில் 3-வது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.