விநாயகர் சிலை வைக்க 3நாளில் அனுமதி: உயர்நீதி மன்றத்தில் அரசு தகவல்
சென்னை:
தமிழகத்தில் விநாயகர் சிலைகள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழகஅரசு விதித்துள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக விண்ணப்பித்து 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
செப்டம்பர் மாதம் 13ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது, நகரங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜை செய்யப்பட்டு பின்னர் கடல் அல்லது குளம் குட்டைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் அதை கரைப்பது குறித்து 27 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இதை எதிர்த்து இந்து அமைப்புகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அப்போது காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், விநாயகர் சிலைகள் வைக்க ஒற்றை சாளர முறைப்படி விண்ணப்பித்த 3 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று கூறியது.
அதைத்தொடர்ந்து விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிமன்றம், விநாயகர் சிலை பந்தலுக்கு மின்சார இணைப்புகளை நேரடியாக கொக்கி போட்டு எடுக்க கூடாது என்று கூறியது. மேலும் விநாயகர் சிலைகள் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.