Random image

விநாயகர் சிலை ஊர்வலம் : இரு தரப்பு மோதலால் நெல்லையில் பரபரப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து நெல்லையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 34 இடங்களில் விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. செங்கோட்டை விநாயகர் குழுவினர், மேலூர் வழியாக விநாயகர் ஊர்வலத்தை எடுத்துச் செல்லும் போது அங்குள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் கூடியிருந்தவர்களுக்கும் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதையடுத்து இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் வெடிக்க, பரஸ்பரம் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இந்த மோதல் சம்பவத்தின்போது கடைகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.