சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவி ஏற்பு

சென்னை:

சென்னை உயர்நீதி மன்றத்துக்கு புதிய நீதிபதியாக கர்நாடகாவை சேர்ந்த வினீத் கோத்தாரி இன்று பதவி ஏற்றார். இதன் காரணமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.

 

கடந்த 11ந்தேதி  மத்திய சட்ட அமைச்சகம்  நீதிபதிகள் 3 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து  அறிவித்து இருந்தது. அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதி மன்றத்துக்கு  மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை  சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். உயர்நீதிமன்ற வளாகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தஹில்ரமனி  அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வினீத் கோத்தாரி பதவியேற்றதால் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கை 60 ஆக இருந்து வந்த நிலையில்,  கடந்த ஆண்டு 75 ஆக உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரே சமயம் 15 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர்.  பின்னர் நீதிபதிகள் ஓய்வை தொடர்ந்து ஓரிரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது 61வது நீதிபதியாக நீதிபதி வினீத் கோத்தாரி பதவி ஏற்றுள்ளார்.

இன்னும், 14 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளது.