தருமபுரி:

தேர்தல் முடிந்ததும் ரூ.2000 கிடைக்கும் என்று இன்று தர்மபுரி மாவட்டத்தில் அன்புமணி ராமதாசை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  பொதுமக்களிடம் ஆசை காட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி கூறியது, தேர்தல் விதி மீறி செயல் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சியான பாமகவின் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.  தொப்பூரில் பா.ம.க.அன்புமணி  ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பிரச்சாரம் செய்தபோது, விவசாயி, தொழிலாளி என எல்லா தொழிலாளிகளின் வங்கி கணக்கிலும் தேர்தல் முடிந்தவுடன், தமிழக அரசு அறிவித்த ரூ.2000 சிறப்பு நிதி வந்து சேரும் என்று கூறினார்.

தொடர்ந்து மக்களிடையே பேசியவர்,  திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தனர் அதை அறவே ஒழித்த அரசு அதிமுக அரசு” என்று கூறியவர், தமிழகம் மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலமாக இருப்பதாக பேசினார்.

மேலும்,  “மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்தோம், தமிழகம் மின்வெட்டு இல்லாமல் இருக்கிறது. 52 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கியுள்ளோம். இந்தியாவில் தமிழகம் உயர் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 2400 ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது என்றும்,  விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்து அதற்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக என்றவர்,  விவசாய தொழிலாளி, சலவை தொழிலாளி என எல்லா தொழிலாளிகளின் வங்கி கணக்கிலும் தேர்தல் முடிந்தவுடன் நிதியுதவி வந்து சேரும் எனவும் கூறினார்.

முதல்வரின் ரூ.2 ஆயிரம் குறித்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.2 ஆயிரம் நிதி வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தடை விதித்துள்ள நிலையில், பொதுமக்களிடம் தேர்தலுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வாக்கு சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.