ரியாத்

வுதி அரேபியாவில் லஞ்ச முறைகேடு செய்ததாக சிறை பிடிக்கப்பட்ட அரசு குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவில் லஞ்ச முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பல தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் பலர் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  சில அமைச்சர்களும் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர்.   அவர்கள் அனைத்து வசதிகளும் கொண்ட விடுதிகளில் காவல் வைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறி வருகிறது.    ஆனால் அவர்களது மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.  மேலும் குடும்பத்தினருக்கும் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சிறை பிடிக்கப்பட்ட உடன் அவர்கள் மீதும் கடும் வன்முறை தாக்குதல் ஏவப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.    அவர்களில் 17 பேர் தாக்குதலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒருவருக்கு கழுத்து திரும்பி இருந்த நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார்.  அவர் உடல் எங்கும் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சவுதி அரசு இதுவரை இந்த விவகாரத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்ட சொத்துக்கள் மற்றும் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பதையும் இதுவரை வெளியிடவில்லை.    ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினரின் சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களுடைய சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு வங்கியில் உள்ள முதலீடுகள் ஆகியவை பட்டத்து இளவரசரின் சொந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  “இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை.   அரசு தலைமை வழக்கறிஞர் தனது விசாரணையை சவுதி அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தி வருகிறார்.   அத்துடன் சட்டப்படி கைதானவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு செய்து வருகிறது.   அவர்களுக்கு ஏற்கனவே உள்ள நோய்களுக்கும் தற்போது அரசு சிகிச்சை அளித்து வருகிறது”  என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.